தமிழ் மக்களுக்காக போராடிய ஈழவேந்தன் கனடாவில் காலமானார்!

0
139

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் காலாமானார். உடல்நலக் குறைவு காரணமாக கனடா – டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான கனகேந்திரன் என்னும் ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார். 

அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். Toronto Western வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஞாயிறு இரவு (உள்ளூர் நேரம்) உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.

கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழ மண் மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் நாடாளுமன்றம் சென்றார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த அவர் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.

இதனையடுத்து இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறினார். 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஈழவேந்தன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவை கடுமையாக விமர்சித்திக் கொண்டிருந்த காரணத்தினாலும் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

கொழும்பு – இரத்மலானையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஈழவேந்தன் 2004 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.