மக்களை ஏமாற்றும் ரணில் – பசில்: இருவருக்கும் இடையே ரகசிய உடன்பாடு

0
40

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற ரகசிய சந்திப்பின் போதே பசில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

ரணில் போட்டியிடமாட்டார்

ஜனாதிபதி தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில் இந்த சந்திப்பில் உறுதியளித்துள்ளார். என்றாலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சிக்கான மக்கள் செல்வாக்கு கடுமையான சரிந்துள்ளதால் தேர்தலில் போட்டியிட்டால் ரணில் தோல்வியடைவது உறுதியென அவர் அறிந்திருப்பதால் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடமாட்டார் எனவும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

விதிமுறைகளை மீறிய விஜயதாச

என்றாலும் பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவும் பசில் ராஜபக்சவும் அடிக்கடி சந்திப்புகளை நடத்திவருவதாகவும் ரணிலை பிரபல்யப்படுத்தும் நோக்கில் அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது போன்ற தொனியில் பசில் உட்பட பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை பொறுப்பேற்றமை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்

விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமாயின் அதனை ஜனாதிபதியே செய்ய வேண்டும் எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிய வருகிறது.

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக ஆளுங்கட்சி சந்தேகம் கொண்டுள்ளது.

அதன் காரணமாகவே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு பசிலின் தரப்பினர் கோரி வருகின்றனர். புத்தாண்டின் பின் இடம்பெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.