தமிழர்கள் உப ஜனாதிபதி பதவியை கோர முடியுமாம்: சிங்கள நாளிதழில் வெளியான அரசியல் பத்தியில் புதிய அறிவுரை

0
34

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு எதிராகவும் அதன் சட்டதிட்டங்கள் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைக்குத் தடையாக இருப்பதாகவும் காலம் காலமாகக் கூறிவரும் நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘மவ்பிம‘ என்ற சிங்கள நாளிதழில் வெளியான அரசியல் பத்தி ஒன்றில் தமிழ் மக்களுக்குக் கூறியுள்ள ஆலோசனைகள் வேடிக்கையாகவுள்ளன.

இன்று புதன்கிழமை (24.04) பிரசுரமாகியுள்ள அப் பத்தி எழுத்தில் புதிய அரசியல் யாப்பின் கீழ் தமிழர்கள் உப ஜனாதிபதிப் பதவிகளைக் கோரமுடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் வடக்குக் கிழக்கு என்பதற்குப் பதிலாக வடக்கு மக்களின் அரசியல் பிரச்சினை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது வடபகுதியில் வாழும் தமிழர்களுக்கு மாத்திரமே அரசியல் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் உண்டு என்ற தொனி அப் பத்தி எழுத்தில் வெளிப்பட்டுள்ளது.

அத்துடன் அப் பத்தி எழுத்தாளருக்கு ஈழர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கான காரண – காரியங்கள் அதன் விபரங்கள் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை என்பதை அவருடைய கட்டுரையின் உள்ளடக்கம் காண்பிக்கின்றது.

உதாரணமாக 2013 இல் வடமாகாண சபை மாகாண சபை இயங்க ஆரம்பித்ததை 2014 இல் உப தேசிய அரசாங்கம் தமிழர்களுக்கு கிடைத்ததாகத் தவறாகக் கருத்திட்டிருக்கிறார்.

‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை‘

‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை‘ என்ற தலைப்பில் வெளியான அப்பத்தி எழுத்தில் காணப்படும் சில முக்கியமாக பகுதிகள் பின்வருமாறு

இலங்கைத்தீவில் எந்தவொரு அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் அதிலிருந்து தவிர்க்க முடியாத முதலாவது மற்றும் இரண்டாவது காரணியாக அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திப்படுத்துவது பிரதான நோக்கமாக இருக்கும்.

அதிகாரப்பரவலாக்கத்தை உள்ளடக்கிய 13 ஆம் சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்தி 37 வருடங்கள் ஆனாலும் கூட இன்னுமும் இலங்கையர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்களுடன் இன்னுமும் உடன்பட்டவில்லை.

நாட்டில் தற்போது 86 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. அவற்றுள், ஆட்சி சௌகரியத்தை அனுபவித்துள்ள பிரதானமான இரு கட்சிகளாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீரங்கா சுதந்திர கட்சி என்பவை விளங்குகின்றன.

முதன்மை வகித்த தமிழ் அரசியல் கட்சிகள்

எவ்வாறாயினும் இந்நாட்டின் முதல் நாடாளுமன்ற தேர்தலை இலங்கையின் தமிழ் கட்சிகளால் ஒருபோதும் மறக்க முடியாது. காரணம் ஐக்கிய தேசியக் கட்சி.

டி.எஸ் சேனாநாயக்க தலைமையில் உருவான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை உருவாக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) துணை நின்றது.

1977 நாடாளுமன்ற தேர்தலில் 6.39 வீதமான தேர்தல் வாக்குகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி (TLF) நாட்டின் பிரதான எதிர்கட்சியாக விளங்கியது.

சிங்கள இனவாத அரசியல்வாதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த விடயம் இலங்கையின் எதிர்கால வளர்ச்சி பாதையை திறக்க வித்திட்டது.

2013 ஆம் ஆண்டுக்கு பின் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் அதிகாரமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது.

எனினும் அதன் பின்னர் தென்னிலங்கையின் ஏனைய கட்சிகளுக்கு காணப்பட்ட வழக்கமான சில பண்புகள் வடக்கின் அரசியல் கட்சிகளுக்கும் தொற்றியமை குறிப்படத்தக்கது.

அரசியல் அதிகார நோக்கங்கள்

அதாவது மாகாண சபை அதிகாரங்களை ஒரு புறத்தில் வைத்துவிட்டு அதிகார நோக்கங்களுக்காக அவர்கள் ஓடியதையடுத்து மாகாணத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக தோன்றிய அரசியல் போட்டி அதிகரித்தது.

தற்போது அரசியல் கட்சிகளிடம் எந்தவொரு அரசியல் கருத்தியல் தொடர்புகளும் இல்லை. இதேவேளை நாட்டின் அதிகளவிலான தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியா மீது சாதகமான அணுகுமுறையை காண்பித்து வருகின்றன.

இது தமிழ் கட்சிகள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்பும் போது தொடர்புபடக்கூடிய அனுகூலமான விடயமாகும். ‘ என்று அப் பத்தி எழுத்தில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.