தேர்தல் காய்ச்சல்; கச்சத்தீவு விவகாரத்தில் பிதற்றும் அண்ணாமலை: இலங்கை தமிழர் பகுதியில் எழும் கடும் விமர்சனங்கள், கண்டனங்கள்

0
53

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டதால் கச்சத்தீவு விவகாரத்தில் பிதற்றி வருகிறார் என இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு விவகாரத்தை திடீரென பாஜக கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட காங்கிரஸ், திமுகதான் காரணம் என்கிறது பாஜக.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

கடுமையாக விமர்சிக்கும் இந்திய அரசியல் பிரபலங்கள்

இதனடிப்படையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு திமுக, காங்கிரஸ் தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி பேசும் பாஜக, சீனா ஆக்கிரமிப்பு பற்றி பேசாதது ஏன் என்றும் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கச்சத்தீவு மீட்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அண்ணாமலைக்கு இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்லத்துரை நற்குணம் கூறுகையில்,

“கச்சத்தீவு இலங்கையின் சொத்து. இந்தியா தாரைவார்த்து தந்துவிட்டது என்கிற அண்ணாமலையின் விமர்சனத்தை கண்டிக்கிறோம். அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாக்குகளை குறிவைத்துதான் இப்படி அண்ணாமலை பேசுகிறார். 1974ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கன்னியாகுமரி வரை மீன்பிடித்தோம். இதனை தடுக்கவே ஒப்பந்தங்களைப் போட்டது இந்திய அரசு என்றார்.

இதேபோல இலங்கை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் பிரான்ஸ்சிஸ் ரட்ணகுமார் கூறுகையில்,

“பொலிஸ் அதிகாரியாக வேலை பார்த்த அண்ணாமலைக்கு கச்சத்தீவு விவகாரம் திருடன் பொலிஸ் விளையாட்டாக தெரிகிறது. எங்களுடைய உயிர் தொடர்புடைய பிரச்சினை. கச்சத்தீவுக்கு யாருமே உரிமை கோர முடியாது. அண்ணாமலையின் கொடும்பாவியையும் எரிக்க தயங்கமாட்டோம் என்றார்.