இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் மதுவுக்கு அடிமையான நபர், தன்னை கண்டித்த மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷானோ. இவரது கணவர் முனீஷ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர் என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தம்பதிக்கு சன்னி (8) மற்றும் அர்ஜுன் (5) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முனீஸ் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
அத்துடன் வீட்டில் மது அருந்திய முனீஸை அவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
உயிரிழந்த பெண்
இதில் அலறித் துடித்த ஷானோ உடல் முழுவதும் தீ பரவியதால் அங்கேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மாமியாருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
ஷானோவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஷானோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் தீக்காயம் அடைந்த முனீஸின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தலைமறைவான முனீஸை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.