மலேசியாவில் விசா அனுமதியை தவறாக பயன்படுத்திய இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது!

0
136

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில், நான்கு மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக, மாநில குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் விசா அனுமதியை தவறாக பயன்படுத்திய மூன்று இலங்கையர்கள் உட்பட 66 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வைத்திருந்த, நான்கு மலேசியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஜோகூர் பாரு, செகாமாட், பத்து பஹாட் மற்றும் மெர்சிங் ஆகிய மாவட்டங்களில் இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தேடுதலின் போது, 324 பேரின் கடவுச்சீட்டு உட்பட பயண ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில குடிவரவுத்துறை பணிப்பாளர் பஹாருடின் தயிர் தெரிவித்துள்ளார்.

முறையான பயண ஆவணங்கள் மற்றும் விசா அனுமதியை கொண்டிருக்காத 42 தாய்லாந்து பிரஜைகள், 7 மியன்மார், 4 வியட்நாம் பிரஜைகள், 3 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 3 இலங்கையர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

கடவுச்சீட்டு உள்ளிட்ட காகிதங்கள் இல்லாதது, விசா அனுமதியை தவறாக பயன்படுத்தியமை, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட மேலதிக காலம் மலேசியாவில் தங்கியிருந்தமை ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.