எட்டு ஆண்டுகள் அயராமல் உழைத்து, தீக்குச்சிகள் மூலம் ஈபிள் கோபுரத்தின் மாதிரியை உருவாக்கினார் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர். தனக்கு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
எட்டு ஆண்டு கால உழைப்பு
பிரான்ஸ் நாட்டவரான ரிச்சர்ட் (Richard Plaud, 47) என்பவர், கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக, எட்டு ஆண்டுகள் அயராது உழைத்து, தீக்குச்சிகள் மூலம் ஈபிள் கோபுரத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கினார்.
706,900 தீக்குச்சிகள் மற்றும் 23 கிலோ பசை ஆகியவற்றை பயன்படுத்தி ரிச்சர்ட் அந்த கோபுரத்தை உருவாக்கி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகின.
தனது கலைப்படைப்பைக் காண கின்னஸ் உலக சாதனைக் குழுவினரை அழைத்தார் ரிச்சர்ட்.
கிடைத்த பெரும் ஏமாற்றம்
ரிச்சர்டின் கலைப்படைப்பைப் பார்வையிட்ட கின்னஸ் உலக சாதனைக் குழுவினரோ, ரிச்சர்டின் கலைப்படைப்பில் ஒரு பெரிய தவறு இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.
அதாவது, தீக்குச்சிகளைப் பயன்படுத்தி கலைவடிவங்களைப் படைக்கும்போது, தீகுச்சியின் முனையிலுள்ள தீக்குச்சி மருந்தை, அதாவது சிவப்பு பாஸ்பரசை அகற்றுவது பெரிய வேலையாக இருக்குமே என்று நினைத்த ரிச்சர்ட், தீக்குச்சி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, தனக்கு பாஸ்பரஸ் முனைகள் இல்லாத தீக்குச்சிகள் கிடைக்குமா என கேட்க, அவர்களும் அவர் கேட்டதுபோலவே தீக்குச்சிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.
ஆனால், கடையில் கிடைக்கும் தீக்குச்சிகளைக் கொண்டு உருவாக்கிய கலைப்படைப்புகளை மட்டுமே உலக சாதனைக்காக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டார்கள் கின்னஸ் உலக சாதனைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இத்தனை ஆண்டுகள் கடினமாக உழைத்தும் தன் ஆசை நிறைவேறாததால் கடும் ஏமாற்றமடைந்துள்ளார் ரிச்சர்ட். என்றாலும், பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது தனது கலைப்படைப்பை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளார் அவர்.
இதற்கு முன், 2009ஆம் ஆண்டு, Toufic Daher என்னும் லெபனான் நாட்டவர், 6.53 மீற்றர் உயரமுடைய, தீக்குச்சிகளால் ஆன ஈபிள் கோபுரத்தின் மாதிரியை உருவாக்கியிருந்தார். அவரது கின்னஸ் சாதனையை முறியடிப்பதற்காகத்தான் ரிச்சர்ட் 7.19 மீற்றர் உயரமுடைய ஈபிள் கோபுர மாதிரியை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.