காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (21.01.2024) நடைபெற்றது.
உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21.01.2024) ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காஸா பகுதியில் மோதல்களைத் தடுத்து சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்த ஜனாதிபதி, 05 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதே இலங்கையின் முன்மொழிவாக இருக்கிறது எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதையும், சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகளைப் பறிக்க முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இதேவேளை, மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மாலைதீவு உப ஜனாதிபதி ஹுசைன் மொஹமட் லத்தீப் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் நேற்று காலை (21) இடம்பெற்றது.
அதனையடுத்து ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும்இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (21.01.2024) கம்பாலாவில் இடம்பெற்றது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ வி. முரளீதரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
லாவோஸ் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் பொக்சேகை கைம்பினோன்மற்றும் பிலிப்பைன்ஸின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத் திணைக்களத்தின் செயலாளர் இவன் ஜோன் உய் ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடினர்.