கேப்டன் மில்லர், அயலான் படங்களின் அப்டேட்!!

0
137

இந்தப் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. வரும் 12 ஆம் தேதி இரு படங்களும் திரைக்கு வருகின்றன. அதேநாளில் இப்படங்களின் தெலுங்குப் பதிப்பு வெளியாவதையும் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

கேப்டன் மில்லர் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்ட படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ப்ரியங்கா அருள் மோகன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், மாரி செல்வராஜ் என பிரபலங்கள் கலந்து கொண்டனர். அருண் மாதேஸ்வரன் பதினைந்து நிமிடங்கள் கேப்டன் மில்லர் கதையை தன்னிடம் கூறியதாகவும், சண்டைக் காட்சிகளை சொன்னபடி எடுக்க முடியுமா என்று முதலில் சந்தேகப்பட்டதாகவும், அருண் மாதேஸ்வரன் சிறப்பாக படத்தை எடுத்திருப்பதாகவும் தனுஷ் கூறினார். அருண் மாதேஸ்வரன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கயிருப்பதாகவும் அவர் கூறினார்.

கேப்டன் மில்லர் படத்துக்கு தெலுங்கு மாநிலங்களிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அது போல் கேரளாவிலும் ரசிகர்கள் படத்தை எதிர்பார்க்கிறார்கள். வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ள இடங்களில் சென்சார் கத்திரிப்போடச் சொன்னதால் எடுத்ததில் 4 நிமிடங்களை படம் இழந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிக வன்முறையான இடங்களை சென்சார் எடிட் செய்யும்படி நிர்ப்பந்தித்திருக்கிறது. நீக்கப்பட்ட காட்சிகள் போக கேப்டன் மில்லரின் ரன்னிங் டைம் 2 மணி 37 நிமிடங்கள்.

சிவகார்த்தியேனின் அயலான் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் டாக்டர் வருண் என்ற பெயரிலும், டான் திரைப்படம் காலேஜ் டான் என்ற பெயரிலும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக அயலான் திரைப்படத்துக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வரும் நிலையிலும் அயலானுக்கு கணிசமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் ரன்னிங் டைம் 2 மணி 35 நிமிடங்கள் என ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர், அயலான் இரண்டுமே வெற்றிவாகை சூடும் என்பதே இப்போதைய கணிப்பாக உள்ளது.