மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்

0
136

2009 இல் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை ராசு மதுரவன் இயக்கியிருந்தார். சகோதரர்களுக்கிடையிலான பாசத்தையும், பங்காளிச் சண்டையையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்த விதம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. மணிவண்ணன் தந்தையாகவும், பொன்வண்ணன், சீமான், கே.பி.ஜெகன்னாத், தருண் கோபி ஆகியோர் மகன்களாகவும் இதில் நடித்திருந்தனர்.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூமகள் ஊர்வலம் படத்தில் இயக்குநராக அறிமுகமான ராசு மதுரவனின் சிறந்த படமாக மாயாண்டி குடும்பத்தார் கருதப்படுகிறது. தொண்டையில் ஏற்பட்ட புற்று நோயால் 2013 இல் அவர் மறைந்தது, ஒரு கிராமத்து கதைச் சொல்லியின் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. அவர் இருந்திருந்தால் மாயாண்டி குடும்பத்தாரின் இரண்டாவது பாகத்தை எடுத்திருப்பார். அந்தக் குறையை கே.பி.ஜெகன்னாத் போக்கவுள்ளார்.

மாயாண்டி குடும்பத்தாரில் நடித்த மணிவண்ணனும், அவரது மகன்களாக நடித்தவர்களும் அடிப்படையில் இயக்குநர்கள். இயக்குநர்களை ஒன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் இதனை ராசு மதுரவன் செய்திருந்தார். அதில் மணிவண்ணனின் மகன்களில் ஒருவராக நடித்த, விஜய்யின் புதிய கீதை உள்பட சில படங்களை இயக்கிய கே.பி.ஜெகன்னாத் மாயாண்டி குடும்பத்தாரின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். மாயாண்டி குடும்பத்தாரை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.

மாயாண்டி குடும்பத்தாரில் தந்தையாக நடித்த மணிவண்ணன் மறைந்த நிலையில் புதிதாக எந்தெந்த நட்சத்திரங்கள் நடிக்கயிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.