என்னிடம் மன்னிப்புக் கேட்டு அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

0
134

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அட்டூழியங்களை மூடிமறைக்கவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ என்மீது கொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

என் மீது பொய் குற்றச்சட்டுக்களை முன்வைத்துள்ள நீதி அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோரி பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தன்னுடைய அமைச்சின் நிலைப்பாட்டை முன்வைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது என்னையும் எனது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சேறுபூசும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

நான் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் படுகொலைக்கு நான் காரணமாக இருந்ததாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஆதாரமற்ற அப்பட்டமான பொய் ஒன்றையே கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் மத்தியில் என் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இதுபோல பேசி பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியிருக்கிறார்.

நீதி அமைச்சரின் இந்த தவறான பேச்சை நான் கண்டிக்கிறேன். எனவே இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.

தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதாக சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் காட்டிக்கொண்டாலும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைக்கூடப் பறிக்கப்படுவதாகவும், குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்வுகள் திட்டமிட்டு குழப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை அச்சுறுத்தி துப்பாக்கிமுனையிலேயே நினைவேந்தல்கள் நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் செய்யும் அட்டூழியங்கள், தமிழ் மக்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சாதாரணமாகக் கைது செய்யும் செயற்பாடுகளை மூடிமுறைக்கவே நீதி அமைச்சர் தன் மீதும் தனது கட்சியின் தலைவர் மீதும் பொய்யானக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.