எட்டு மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு – குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல்

0
158

காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் காஸாவை விட்டு வெளியேறவும் நிவாரணப் பொருட்கள் சிலவற்றை ரபாஹ் எல்லை மூலம் கொண்டு வரவும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

உலக நாடுகளின் இஸ்ரேலின் அட்டூழியத்துக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பை தொடர்ந்தே இப்படி ஒரு நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், 2,329 பலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதல் ஆரம்பமாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இதில் இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதற்குப் பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, மேலும் தரைவழித் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காஸா பொதுப்பணி அமைச்சு வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலில் 1,324 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த கட்டிடங்களில் இருந்த 5,405 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 3,743 வீடுகள் சீரமைக்க முடியாத மற்றும் வசிக்க முடியாக அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதுதவிர 55,000 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.