ஜெனீவாவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்…

0
183

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (28.09.2023)  ஜெனீவா நகரில்  ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54 ஆவது மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் படுகொலை

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், ஆண்டுகளாக இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஜெனீவாவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை | Srilanka Punished In International Criminal Court

இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அன்புமணி எடுத்துரைத்தார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21 ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் (OHCHR’s Sri Lanka Accountability Project-SLAP) திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள்

இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில், குற்றவியல் வழக்குகளை தொடருதல், உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐ,நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் உதவுமாறு கூறினார்.

ஜெனீவாவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை | Srilanka Punished In International Criminal Court

இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி, சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட, பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

ஜெனீவாவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை | Srilanka Punished In International Criminal Court

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

மேலும் இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும், இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC),சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற சர்வதேச பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.