கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
231

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஒன்பதாவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் | Kokkuthodduwai Human Temporarily Suspended

இதன்போது மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

ஒன்பது நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 17 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஒன்பதாம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.கங்காதரன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் வாரமளவில் அந்த பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அகழ்வு பணிகளில் பங்கேற்றுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.