தப்பியோடிய மரண தண்டனை கைதி: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

0
206

மரண தண்டனை விதிக்கப்பட்டு  தப்பியோடி தலைமறைவாக இருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ராகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (14.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் (15.06.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரைக் கடந்த 2001ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவரை அடித்துக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தப்பியோடிய மரண தண்டனை கைதி: 20 வருடங்களுக்கு பின்னர் கைது! | Death Row Inmate Arrested After 20 Years

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி

இதையடுத்து இரண்டு சகோதரர்களும் விளக்கமறியலில் இருந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அவர்கள் வேறு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான தற்போது கைது செய்யப்பட்டவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் 2012 இல் விடுவிக்கப்பட்ட நிலையில் தப்பியோடியவருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர் தலைமறைவாக இருந்து நிலையில் சுமார் 20 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் (14.06.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.