பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிறைவேற்றாமல் இருக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று(30) வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் ஜெனிட்டா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
“பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டத்தை பாதகமாக்கும் என்பதற்காகவும் எமது உரிமைகளை கோர முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும், இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.
நாம் இன்று ஜனநாயக முறையிலும் அகிம்சை வழியிலும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். ஆனால், இந்த அரசாங்கமானது பயங்கரவாத தடைச் சட்டத்தினை எடுப்பதாகக் கூறி புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.
இதனால் எமது ஜனநாயக போராட்டத்தில் கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம் எமக்கு கிடைக்காது என்பதனால் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட அனைவரிடம் கேட்டுக்கொள்வது இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிறைவேற்றாமல் இருக்க அடிகோல வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
“எங்கே எங்கே உறவுகள் எங்கே”
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, “எங்கே எங்கே உறவுகள் எங்கே” என்ற கோசங்களையும் எழுப்பியவாறும் “புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நிறுத்து”, “புதிய புதிய சட்டங்களை இயற்றி மக்களின் குரலை நசுக்காதே” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.