ஜனாதிபதியால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் – எஸ்.ஆனந்தகுமார்

0
404

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடுடன் கட்சி மீண்டும் பலப்படுத்தப்படும் என்பதுடன் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து விதமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமவிங்க தலைமையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இலங்கையின் பழமையான கட்சியும் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதில் முன்னணி கட்சியாகவும் செயற்பட்ட பாரம்பரியமிக்க இந்தக் கட்சியின் சமகால தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்துவருவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவந்த இலங்கைக்கு மீண்டும் சுவாசிக்கும் சக்தியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் கொடுத்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சீர்குலைந்திருந்த சட்டவாட்சியை மீண்டும் வலுப்படுத்தி சகல தரப்பினரை இணைத்து சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான செயல்பாடுகளிலும் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் என்றார்.

76ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐ.தே.க இந்த நாட்டின் வளர்ச்சியிலும் சிறந்த பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தியதில் முதன்மை கட்சியாகும் கடந்த நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது எனவும் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை மீண்டும் ஐ.தே.கயால் மாத்திரமே ஸ்திரப்படுத்த முடியும் என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது இடைகால பட்ஜெட் மற்றும் உறுதியான தீர்மானங்கள் மூலம் உணர்த்தியுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.