இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உருவ பொம்மைகள் எரிப்பு!

0
380

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் இன்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா, ஹென்போல்ட், திஸ்பனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த போராட்டமானது எல்ஜீன் பிரதேசத்திலிருந்து பேரணியாக திஸ்பனை சந்தி வரை சென்று மீண்டும் போராட்டகாரர்கள் லிந்துலை மெராயா பிரதேசத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும், அவ்விடத்தில் சவப்பெட்டி, டயர், உருவ பொம்மை ஆகியன எரித்து மலையக மக்களுக்கு துரோகம் செய்த அரவிந்தகுமார் ஒழிய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து சேவையும் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

இதன்போது அமைச்சரின் வீட்டிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படாத வகையில் லிந்துலை, நானுஓயா, அக்கரப்பத்தனை, டயகம ஆகிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.