நாங்கள் உயிருடன் இருக்கும் வரை புடினின் கனவு பலிக்காது!

0
39

உக்ரைனின் மரியுபோல் நகரில் தாங்கள் உயிருடன் எஞ்சும் வரையில் விளாடிமிர் புடினின்(Vladimir Putin) கனவு பலிக்காது என உக்ரைன் வீரர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் மட்டும் சில நூறு உக்ரைனிய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிரடி தாக்குதல் எதுவும் எடுக்க வேண்டாம் என விளாடிமிர் புடின்(Vladimir Putin) உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் உக்ரைனிய படைகளை சரணடைய வாய்ப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உக்ரைனிய வீரர்கள் விளாடிமிர் புடினின்(Vladimir Putin) கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையில், அசோவ்ஸ்டல் தொழிற்சாலையை மொத்தமாக மூடி விட புடின்(Vladimir Putin) உத்தரவிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியேறாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பதுங்கியுள்ள அப்பாவி மக்கள் மற்றும் உக்ரைன் வீரர்களின் மரணத்திற்கு வழி வகுக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மரியுபோல் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் 9,000 அப்பாவி உக்ரேனிய மக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம். செயற்கைக்கோள் படங்களால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.

அதில்,கேப்டன் ஸ்வயடோஸ்லாவ் பலமர்(Svyatoslav Palmer) குறிப்பிடுகையில், மரியுபோல் நகரில் நாங்கள் எஞ்சியிருக்கும் வரையில், மரியுபோல் நகரம் கண்டிப்பாக உக்ரைன் வசமே இருக்கும்.

ரஷ்யாவின் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி அளிப்போம் என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)யும் மரியுபோல் நகர வீரர்கள் குறிப்பிட்ட அதே கருத்தையே பதிவு செய்துள்ளார்.

மேலும், எஃகு தொழிற்சாலையில் பதுங்கியுள்ள உக்ரேனிய வீரர்களில் சுமார் 500 வீரர்கள் காயங்களுடன் அவதிப்படுவதாகவும், போதுமான மருத்துவ உதவிகள் தேவை எனவும் உணவு பற்றாக்குறை கடுமையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.