புதிய அமைச்சரவை நாளை: ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !

0
46

புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை இராஜினாமா செய்தது.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவியில் இருந்த நிலையில், ஏனைய அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.