மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஆணைக்குழுவை நியமிக்காதிருந்திருந்தால் எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. எனக்கும் எனது குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் எந்த அவமானமும் செய்திருக்க மாட்டார்கள்.
(Central Bank appoint bailout suffered President disrespect family)
எப்படியிருப்பினும் நாட்டுக்காக நான் செய்யவேண்டியதை செய்தேன். நான் எனக்கு வருகின்ற எந்தப்பிரச்சினையையும் நாடு என்ற இடத்திலிருந்தே பார்ப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
நான் ஜனாதிபதியானவுடன் நூறுநாள் திட்டத்தை செய்வதற்கு பதிலாக பாராளுமன்றத்தை கலைத்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இன்றைய எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. புதிய கட்சிகளும் வந்திருக்காது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.
சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கின்ற விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கேள்வி: சோபித்த தேரரின் நினைவு தின நிகழ்வில் நீங்கள் ஆற்றிய உரையின் மூலம் நீங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிகின்றது. நீங்கள் அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கின்றீர்களா? அல்லது தனிமையாக்கப்பட்டுள்ளீர்களா?
பதில்: இல்லை நான் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஊழல்வாதிகளிடமிருந்து விலகியுள்ளேன்.
கேள்வி: உங்களுடன் இணைந்து அரசாங்கம் செய்கின்றவர்கள் ஊழல்வாதிகள் என்று கூற வருகின்றீர்களா?
பதில்: ஊழல்வாதிகள் யார்? ஊழல் அற்றவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இது முழுநாட்டு மக்களுக்கும் தெரியும். எனது கொள்கையை நான் மாற்ற முடியாது. நான் எப்போதுமே ஊழலுக்கு எதிரானவன். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது அதில் ஊழல் அரசியல்வாதிகளும் இணைந்து கொள்கின்றனர். இன்று அதுதான் நடந்துள்ளது. யார் சரி, யார் தவறு என்பதை எதிர்காலத்தில் மக்கள் புரிந்துகொள்வார்கள். இன்று ஊழலற்ற அரசியலே மக்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த மக்களின் தேவையுடன் நான் எனது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன் அதற்காக ஊழல் அரசியலை எதிர்க்கும் அனைவருக்கும் நான் அழைப்பு விடுகின்றேன். அதற்காக கட்சிபேதமின்றி விரிவுபட்ட பலமான தேசிய அரசியல் சக்தியொன்றை உருவாக்க மக்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன்.
கேள்வி : நீங்கள் உங்கள் கட்சிக்குள் பாரிய மறுசீரமைப்பை செய்துள்ளீர்கள், செயற்பாட்டு அரசியலில் இல்லாத பேராசிரியர் ஒருவரை கட்சியின் செயலாளராக நியமித்துள்ளீர்கள். சுயாதீன அணியும் உங்களுடன் இருக்கின்றது. அந்தக்குழு உங்களுடனும், மஹிந்தவுடனும் இணைந்து செயற்படுகின்றது. தாமரை மொட்டுடன் இணைவதா? சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பின் நோக்கம்.
பதில் : இல்லை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையின் கீழ் இணைந்து செயற்படவேண்டும். சுதந்திரக்கட்சியில் இருந்து கொண்டே நான் கூறுகின்ற ஊழலுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று நம்புகின்றேன். அதனூடாகவே மக்கள் எதிர்பார்க்கும் திசையை நோக்கி பயணிக்க முடியும். இன்று இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் உள்ளகப் பிரச்சினைகள் உள்ளன. உள்ளகப் பிரச்சினை இல்லாத எந்தக் கட்சியும் இலங்கையில் இல்லை. எமது கட்சி அப்படியில்லை என்று யாராவது கூறினால் அது பொய்யாகும். எனினும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். சரியான வேலைத்திட்டம் என்னவென்று அடையாளம் கண்டு இணைந்து செயற்படுவதே இங்கு முக்கியமாகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறான அவமானங்கள் தடைகள் வந்தாலும் அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து நான் பரந்துபட்ட அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பேன்.
கேள்வி : உங்கள் மகன் தாம் சிறிசேனவிற்கு மஹரகம பிரதேசத்தில் சொகுசு வீடொன்று இருப்பதாக இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றது இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் : மஹரகமவில் பல வீடுகள் இருக்கலாம். மஹரகமவில் அதிக மக்கள் வாழ்கின்றனர். அதனால் அப்பகுதியில் பெரிய வீடுகள் இருக்கலாம். ஆனால் எனக்கோ எனது பிள்ளைகளுக்கோ மஹரகமவில் எந்த வீடும் இல்லை. சமூக இணையதளங்கள் பல வதந்திகளைப் பரப்புகின்றன. இவற்றுக்கு நாம் பதிலளிக்கப்போனால் எனக்கு வேறு வேலை செய்ய நேரம் இருக்காது. எனவே அவற்றைக் கணக்கில் கொள்ளாது நாட்டுக்காக சேவையாற்ற வேண்டியுள்ளது. உண்மையல்லாத விடயம் மிக வேகமாக சமூகத்தில் பரவி சென்றாலும் அதன் உண்மைத் தன்மை தாமதமாகியாவது மக்களிடம் செல்லும். பொய்யானத்தகவல்கள் மின்சாரத்தை வேகத்தை விட வேகமாக பரவிச்செல்லும். இவை திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் அரசியல் சேறுபூசும் செயற்பாடாகும். ஊழல்வாதிகளும் ஊழல்வாதிகளை காப்பாற்றுபவர்களுமே இவற்றை செய்கின்றனர். சமூக இணையதளங்கள் இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவற்றினால் எனக்கு எதிராக தெரிந்தோ தெரியாமலோ சேறுபூசப்படுகின்றது.
கேள்வி : உங்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நூறுநாள் திட்டமே முன்னணியில் இருந்தது. ஆனால் அதுதொடர்பில் நீங்கள் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை? வெளியிட்டிருந்தீர்கள். இந்த அரசாங்கத்தில் நெருக்கடி அதனூடாகவே ஏற்பட்டதாக கூறுனீர்கள்?
பதில் : இது தொடர்பில் நான் அண்மையில் விளக்கமளித்தேன். அரசாங்கம் என்ற ரீதியில் அப்போது நூறுநாள் வேலைத்திட்டத்தை எடுத்திருக்கவேண்டிய அவசியமில்லை. பாராளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஐக்கியதேசியக்கட்சி அரசியலமைப்புத் திருத்தம் புகையிலைச் சட்டம், சுகாதார கொள்கை, போன்ற விடயங்களை செய்யவேண்டியிருந்தது. அன்று அவை அனைத்தையும் நாங்கள் சுதந்திரக்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றே செய்தோம். இன்று அவற்றை மறந்துவிட்டனர். நினைவு இருந்தாலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற தோற்றத்தை காட்ட முயற்சிக்கின்றனர். சிலர் நாம் சுதந்திரக்கட்சியைப் பொறுப்பேற்றதால் பிரச்சினைகள் எற்பட்டன எனக் கூற முற்படுகின்றனர். நான் சுதந்திரக்கட்சியை பொறுப்பேற்றதன் காரணமாகவே நூறுநாள் திட்டத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது. நூறுநாள் திட்டம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறவில்லை. இதனை யார் செய்தது என்று எனக்கு தெரியாது என்றே கூறினேன். எனினும் சில ஊடகங்களும் எனது எதிரிகளும் இதனை திரிபுபடுத்தி வெளியிட்டனர். இது எனக்குத் தெரியாது என்று கூறியதாக செய்தி வெளியிட்டனர். ஆனால் நூறுநாள் திட்டத்தை உருவாக்கியது யார் என்று எனக்குத் தெரியாது என்றே நான் கூறினேன். நாங்கள் அதனை செயற்படுத்தினோம். ஆனால் உண்மையிலேயே அதனை செயற்படுத்தியிருக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் ஜனாதிபதியாகிவுடன் பாராளுமன்றத்தை கலைத்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இன்றைய எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. புதிய கட்சிகளும் வந்திருக்காது.
கேள்வி : அரசியல் ஸ்திரமற்ற தன்மையுடனேயே கூட்டரசாங்கம் வந்தது. அதன் தலைவருக்கு எப்போதும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதிலிருந்து விலகுவதற்கு உங்களுக்கு நோக்கம் இருக்கிறதா? சரியான பயணத்தை மேற்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது அல்லவா?
பதில் : நிரந்தரமான வேலைத்திட்டமொன்றுக்கு செல்ல வேண்டுமானால் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டும். பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எம்.பி.க்களின் விருப்பத்துடனேயே அதனைக் கலைக்கலாம். அதனால் பாராளுமன்றம் இப்போதிருக்கின்ற நிலையிலேயே இணைந்து செயற்படுவதே முடியுமானதாகும். உள்ளக ரீதியில் அனைத்துக்கட்சிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவே நாட்டை ஆதரிக்கும் அனைவரும் அந்த நெருக்கடிகளை மறந்து நாட்டுக்காக இணைந்து செயற்பட முன்வரவேண்டும். பாராளுமன்றத்தைக் கலைப்பது என்றால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துடன் கலைத்து தேர்தலுக்கு செல்லவேண்டும்.
கேள்வி: பிணைமுறி வர்த்தகர்களிடம் காசோலை பெற்ற 118 பேரின் பட்டியல் இருப்பதாக கூறப்படுகின்றது. சிலர் 167 இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தப் பெயர்ப்பட்டியல் உங்களுக்கு மட்டுமே தெரியும் எனக்கூறப்படுகின்றது. ஊழலுக்கு எதிராக போராடும் நீங்கள் ஏன் இந்தப்பட்டியலை வெளியிடாமல் இருக்கின்றீர்கள்?
பதில்: இது தொடர்பில் என்னிடம் கேட்பவர்கள் தெளிவில்லாமல் இருக்கின்றனர். ஜனாதிபதி தனக்கிருக்கின்ற அதிகாரத்தின் ஊடாகவே விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கின்றார். பிணை முறி தொடர்பாக உயர்நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு வெளியிட்ட பரிந்துரைகள், செய்யப்படவேண்டிய செயற்பாடுகள் என்பவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் மத்திய வங்கிக்கும் பாரப்படுத்தியுள்ளேன். தற்போது அந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதற்கிடையில் இந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தும் சட்ட உரிமை ஜனாதிபதிக்கு இல்லை. எனவே வெறுமனே கூச்சலிடும் மூளையில் பிரச்சினை உள்ளவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். மேடையில் வீரர்கள் ஆகாமாமல் உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு அறிக்கை தொடர்பில் இருக்கின்ற சட்ட நிலைமைகள் அரசியலமைப்பு நிலைமைகள் என்பவற்றின் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும். முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஊடாகவே அவர்கள் யார் என்பது தெரியவரும். அதனை தவிர்த்து இந்த அறிக்கைக்குள் இப்படியொரு பட்டியல் இருப்பதாக எனக்குத் தெரியாது.
கேள்வி : பிணைமுறி ஆணைக்குழு நியமனத்துடனேயே உங்களுக்கு எதிரான நெருக்கடிகள் உருவாகின. அப்படி செய்திருக்காவிடின் நீங்கள் இனிமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில் : யார் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் துரோகம் செய்தாலும் அவமானப்படுத்தினாலும் நான் செய்தது சரி. அது நாட்டுக்காக செய்த விடயம். நீங்கள் கூறுவது போன்று இந்த ஆணைக்குழுவை நியமிக்காதிருந்தால் எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. எனக்கும் எனது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் எந்த அவமானமும் செய்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் நாட்டுக்காக நான் செய்யவேண்டியதை நான் செய்தேன். நான் எனக்கு வருகின்ற எந்தப் பிரச்சினையையும் நாடு என்ற இடத்திலிருந்தே பார்ப்பேன். இந்த ஆணைக்குழுவை நியமித்ததன் ஊடாகவே என்னைப்பற்றி தவறான விடயங்களை முன்வைத்து சிலர் விமர்சிக்கின்றனர்.
கேள்வி : பிரதி சபாநாயகர் தெரிவு விடயத்தில் உங்கள் தரப்பு களமிறக்கிய சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வி அடைந்தார். இது உங்களது பாராளுமன்ற அதிகாரத்தை மதிப்பிடும் ஒரு அடையாளமா?
பதில் : இல்லை. பாராளுமன்ற செயற்பாடுகள் வித்தியாசமானவை. பாராளுமன்றத்தில் சபாநாயகர் , பிரதி சபாநாயகர் ஆகியோரை தெரிவு செய்யும் போது கட்சிகளின் தீர்மானத்திற்கு அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் இந்த பிரதி சபாநாயகர் தெரிவும் நடைபெற்றது. அதற்கு மாறாக இந்த முடிவால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இது 225 எம்.பி.க்களின் உரிமை. அதனை தவிர வேறு எந்த நிலைப்பாடும் எனக்கு இல்லை.
கேள்வி : 20 ஆவது திருத்த சட்டத்திற்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா?
பதில் : 20 ஆவது திருத்த சட்டத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பார்த்தேன் இன்றுவரை எனக்கு அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே அதனால் நான் ஒன்றும் கூற முடியாது.
கேள்வி : ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறியே நீங்கள் அதிகாரத்திற்கு வந்தீர்கள். எனினும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்புக் கோபுரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு முன்னர் இந்த தொலைக்காட்சி உங்களை விமர்சித்தது. எனவே இந்தத் தடையின் பின்னால் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றதே?
பதில் : இந்த சம்பவத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது நிறுவன ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானம். நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். அதனைத் தவிர்த்து என்னுடைய தனிப்பட்ட எந்தவிதமான தொடர்பும் நீங்கள் கூறும் இந்தக் காரணங்களுடன் இல்லை.
ஜனாதிபதியாக நான் வெற்றிபெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவமானமும், நெருக்கடியும். எனத் தெரிவித்திருந்தார்.