பெரும் அபாயத்தை நோக்கி உலகம்?

0
925
G7 Deadlock Tamil News

 

கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். G7 Deadlock Tamil News

இதனால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக் நகரில் ஜி 7 மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னிச்சையாக பெரியளவில் இறக்குமதி வரி விதித்த பிரச்னை, இந்த மாநாட்டில் பிரதிபலித்தது. தனது நட்பு நாடுகளையும் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்ததற்கு ஜி 7 கூட்டமைப்பில் உள்ள 6 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின.

ஆனால், டிரம்ப் அதை ஏற்க மறுத்து விட்டார். மேலும், மற்ற உறுப்பு நாடுகளை சீண்டும் வகையில் மாநாட்டில் டிரம்ப் பேசினார். இந்த மாநாடு முடியும் முன்பாகவே, ஜி 7 கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி விட்டு சிங்கப்பூர் செல்ல தனது விமானத்தில் ஏறினார்.

அதன்பின் பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின், ‘‘இரும்பு, அலுமினியத்துக்கு அமெரிக்கா விதிக்கும் அதிகளவிலான இறக்குமதி வரி, கனடாவை அவமதிப்பது போன்றது. முதலாம் உலகப்போர் காலத்திலிருந்து பல முரண்பாடான சமயங்களில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் கனடா தலைவர்கள் உறுதுணையாக நின்றுள்ளனர்’’ என்றார்.

அதன்பின் ஜி7 மாநாட்டில் ஒருமனதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘உலக வர்த்தகம் இன்னும் நியாயமாக இருக்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பை கூடிய விரைவில் நவீனமாக்க நாம் உறுதி ஏற்கிறோம்.

வரித் தடைகள், வரியில்லா தடைகள், மானியங்கள் ஆகியவற்றை குறைக்க முயற்சிப்போம்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஜி7 தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன் விவரம் அதிபர் டிரம்புக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை முற்றிலும் நிராகரித்து டிவிட்டரில் டிரம்ப் வெளி்யிட்ட அறிக்கையில், ‘ஜஸ்டின் தனது பேட்டியில் பொய் தகவல்களை அளித்துள்ளார்.

உண்மை என்னவென்றால் அமெரிக்கா விவசாயிகள், தொழிலாளர்கள், நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கனடாதான் அதிக வரி விதிக்கிறது. இந்த கூட்டறிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என அமெரிக்க பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்து கொள்கிறது. அது அவர்களுக்கு தெரியும். இதை நான் அவர்களிடம் சொன்னால், என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நான் வெளியேறிய பிறகு ஜி7 கூட்டத்திலும், நிருபர்கள் சந்திப்பிலும் ஜஸ்டின் அடக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

அப்படி நடந்து கொண்டால்தான் அவர் அடாவடி, நேர்மையற்றவர் என்பது தெரியாது’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஜஸ்டின், ‘‘கனடா நாட்டினர் அடக்கமானவர்கள், நியாயமானவர்கள், நாங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. அமெரிக்கர்கள் எங்களுக்கு விதிக்கும் நியாயமற்ற வரிக்கு நிகராக நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதித்து ஜூலை 1ம் திகதி முதல் நடவடிக்கை எடுப்போம் என அதிபர் டிரம்பிடம் கூறினேன்’’ என்றார். எதிரி நாட்டு தலைவர்களான ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் ஆகியோருடன் நட்பை விரும்பும் அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு ஜி7 மாநாடு இன்னொரு சம்பவம். ஜி 7 நாடுகளுக்கும், டிரம்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் டிரம்ப், கிம் நாளை பேச்சுவார்த்தை கனடாவில் ஜி7 மாநாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ேநற்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் ஏர் சீனா விமானத்தில் ஷாங்கி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கையும் கிம் நேற்று சந்தித்தார்.

டிரம்ப்-கிம் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை இருவரும் சந்தித்து பேசுகின்றனர். வடகொரியா மீண்டும் அணு ஆயுதம் தயாரிக்காத வகையில் முழு அணு ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. பாதுகாப்பு உத்தரவாதத்துடன், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு உறுதியை வடகொரியாவும் அறிவித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் இரு தலைவர்கள் அளிக்கும் பேட்டியை பொருத்துதான், இந்த பேச்சுவார்த்தை வெற்றியா, தோல்வியா என தெரியவரும்.