நான் அசைவ உணவை உண்ணமாட்டேன்; உங்கள் இப்தார் கஞ்சியை அருந்த முடியாது – விக்னேஸ்வரன்

0
5328
Vigneswaran Iftar phenomenon Jaffna Muslim devotional speech

(Vigneswaran Iftar phenomenon Jaffna Muslim devotional speech)

2018ம் ஆண்டிற்கான இப்தார் நிகழ்வின் விசேட நாட்களில் ஒன்றான இன்றைய ரம்ழான் நோன்பு திறத்தல் தின வைபவத்தில் உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டு இங்கு நடைபெறும் முஸ்லீம் இறைவழிபாட்டிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இப்தார் கஞ்சி அருந்தும் நிகழ்விலும் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த போது எனது உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றியும் இன்னோரன்ன விடயங்களைப் பற்றியும் இந்த ஏற்பாட்டாளர்கள் விசாரித்திருந்தார்கள் என அறிந்தேன். நான் ஒரு இந்துவாக சைவசமயக் கோட்பாடுகளுக்கு அமைய சைவ உணவுகளை மட்டும் உண்பவனாக வாழ்கின்ற போதும், எனக்கு அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் இல்லை எனத் தெரிவித்திருந்தேன். இந்த இப்தார் கஞ்சி வழங்கும் நிகழ்வில் உங்கள் கஞ்சியை என்னால் அருந்தமுடியாத போதும் அதன் சுவையை நீங்கள் யாவரும் இரசிப்பது எனக்கு மகிழ்வைத் தருகின்றது. அந்தக் கஞ்சியோடு சேர்த்து உங்களால் பகிரப்படும் அன்பையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
வடமாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். எனினும் 1990ம் ஆண்டில் இப் பகுதியில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பாகங்களிலும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றார்கள். இது மனவருத்தத்திற்குரியது. இவர்களில் குறிப்பிட்ட ஒரு வகுதியினர் கொழும்பிலும், நீர்கொழும்பு போன்ற பகுதிகளிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து தற்போது நல்ல நிலைமைகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றேன். ஆனால் புத்தளம் பகுதிகளில் குடியேறிய மக்கள் பொருள் பண்டங்களைத் தேடக்கூடிய வாய்ப்பு வசதிகள் குறைவாக உள்ள நிலையில் அடிப்படை வசதிகளுடனான வாழ்க்கையையே தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது. இது கவலைக்குரிய விடயமாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லீம் மக்கள், ஏனைய மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்து வந்த போதும், 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைகள் அவர்களின் வாழ்க்கையைச் சிதறுண்ட நிலைக்கு மாற்றியுள்ளது. இம் மக்களை அவர்கள் வாழ்ந்த அந்தந்தப் பிரதேசங்களில் அவர்களின் சொந்த நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. முயற்சிகள் வெற்றி அளிக்கும் என்று நம்புவோம்.
முஸ்லீம் மக்களுக்கு அவர்களுடைய இஸ்லாமிய மதத்தின்பால் ஆற்றப்படவேண்டிய ஐந்து முக்கிய கடமைகள் உள்ளன. அவையாவன –
கலிமா எனப்படும் சத்தியப்பிரமாணம் ஐந்து வேளைத் தொழுகை சக்காத் எனப்படும் ஏழைகளுக்கான வரி நோன்பு கடமைகள் வசதியுடையவர்கள் மக்காவுக்கு சென்று இறை இல்லத்தைத் தரிசித்தல். இந்த ஐந்து கடமைகளும் ஒரு முஸ்லீமுக்கு முக்கியமான கடமைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியத் தொழுகையின் போது இசைக்கப்படுகின்ற பாங்கு ஒலி அத் தொழுகையின் போது,
‘அல்லா மிகப் பெரியவன் அல்லாகுத்தாலாவைத் தவிர வேறு யாரும் இல்லை என சாட்சி கூறுங்கள் முகமது நபி அல்லாகுத்தாலாவின் தூதுவர் என சாட்சி கூறுங்கள் தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள் வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள் அல்லா மிகப் பெரியவன்’
என்ற கருத்துப்பட அரபு பாiஷயில் கூறப்படுகிறது. முஸ்லீம் மதத்தை இறுக்கமாக பின்பற்றுகின்ற ஒரு முஸ்லீம் மகன் தான் என்ன கடமையில் இருந்தாலும் பாங்கு இசைக்கப்பட்டதும் தனது செயல்கள் எல்லாவற்றையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு தொழுகையில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
நான் கொழும்பு புதுக்கடையில் பிறந்து அங்கு சில காலம் வாழ்ந்ததால் பாங்கு ஒலி கேட்டுப் பரீட்சயப்பட்டவன். அந்த ஒலி இறைவனைத் தானாகவே நினைப்பூட்டும் வல்லமை வாய்ந்தது.
இஸ்லாமிய மக்களின் மறைநூலான அல்குர்ரான் அருளப்பட்ட இந்த மாதத்தில் நடைபெறுகின்ற ரம்ழான் நோன்பு முஸ்லீம் மக்களுக்கு ஒரு செய்தியை கூறிச் செல்கின்றது. இக் காலத்தில் இறை பக்தியை மேன்மையடையச் செய்வதும் அல்லாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு அடுத்த 11 மாதங்களுக்கும் இஸ்லாம் மதத்தில் கூறப்பட்ட மனிதப் பண்புக்கும் இறை ஒழுக்கத்திற்கும் அமைய உண்மையான முஸ்லீமாக ஹறாம் இழைக்காதவனாக வாழ்வதற்குரிய ஒரு சத்தியப் பிரமாண நிகழ்வாக இந்த இப்தார் நிகழ்வு கொள்ளப்படலாம். நான் சுமார் 40 வருட காலம் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தவன். ஒன்பது நாட்களும் சாப்பிட மாட்டேன். குறிப்பிட்ட நேரங்களில் நீராகாரந்தான். நோன்பு அல்லது விரதம் என்பது எம்மை உடல் உணர்வில் இருந்து இறையுணர்வுக்கு அழைத்துச் செல்லுந் தன்மை வாய்ந்தது.
மதங்கள் அனைத்தும் நல்ல வழிகளையே மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. ஆனால் மக்கள் தான் அவற்றை புரிந்துகொள்ளாது தமக்குத் தாமே அடித்துக் கொண்டு பிரிந்து நிற்கின்றனர். 2017ம் ஆண்டு ஹஜ் பெருவிழாவின் போது எருக்கலம்பிட்டி கிராம மக்களின் அன்பான அழைப்பை ஏற்று அந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எருக்கலம்பிட்டிக்கு சென்றிருந்தேன். அந்த மக்கள் என்னை அன்பாக அழைத்து கௌரவப்படுத்தியிருந்தமையை நன்றியுடன் இந் நேரத்தில் நினைவு கொள்கின்றேன். அதுபோன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்களாகிய நீங்கள் உங்கள் இஸ்லாம் மத விழாவில் என்னை ஒரு இந்துவாகப் பார்க்காமல் அன்புடன் வரவேற்று கௌரவித்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.
இறைவனின் படைப்பிலே ஆறு அறிவு கொண்ட ஒரு உயிரினமாக விசேடமாக படைக்கப்பட்ட மனித குலம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும் பிரிந்து நிற்பதும் எமது அறியாமை என்ற உணர்வை அனைத்து மதங்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை சிலர் கேட்பதாக இல்லை. இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்கக்கூடிய இந்த ஈழமணித் திருநாட்டில் வாழும் மூவின மக்களும் பகைமைகளை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகோதரர்களாக வாழத்தலைப்பட்டிருப்பார்களேயாயின் எமது நாடு அன்பும் அறனும் உடைய ஒரு புண்ணிய பூமியாக இந்தப் புவியின்பால் திகழ்ந்திருக்கும். 1990களில் ஒரு இடம்பெயர்வு ஏற்பட்டிருக்காது. தம்புள்ளையில் அமைந்திருந்த பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டிருக்காது. கண்டியில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. காலத்திற்குக் காலம் கரியேற்றும் கப்பல்களில் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள்.
மாறாக அறிவில் சிறந்து விளங்கும் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு ஐக்கிய இலங்கையாக இந்த நாடு பரிணமித்திருக்கும். லீ குவான் யூ அன்று கூறினார் – ஒரு மொழி நாடு பிரிவினையைக் கொண்டு வருமென்று. பெரும்பான்மையினர் தமது மொழியை எல்லோர் மீதும் திணித்ததால் எல்லா இனங்களும் இடருற்றன. எமது ஒற்றுமை குலைந்தது. அந்த ஒற்றுமையை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். எமக்கிடையே புரிந்துணர்வு வளர்ந்தால்த் தான் ஒற்றுமை ஏற்படும். சுயநலமும் மனதில் வெறுப்பும் இருந்தால் அவை அந்த ஒற்றுமையைக் குலைத்துவிடும்.
எனவே இன்றைய இந்த முஸ்லீம் மக்களுக்கான இனிய நன்நாளில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு எமக்குரிய உரித்துக்களுடன் நிலைபேறான வாழ்க்கையை முன்னெடுக்க அனைத்து மதங்களும் உதவவேண்டும் எனத் தெரிவித்து 2018ம் வருடத்திற்கான உங்கள் ரம்ழான் நோன்பு நிகழ்வுகள் இனிதே நிறைவுற எல்லாம் வல்ல அல்லாவின் அருளாசிகள் உங்களுக்கு கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என கூறினார்.
tags;-Vigneswaran Iftar phenomenon Jaffna Muslim devotional speech
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites