Burlington Car baby
பேர்ளிங்டன் பகுதியில் வாகனம் ஒன்றினுள் தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தந்தை மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேர்ளிங்டன் நோர்த் சேர்விஸ் வீதிப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.
குறித்த பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் காணப்பட்ட குழந்தை ஒன்று மூச்சுப் பேச்சின்றி கிடந்ததை அடுத்து அதிகாரிகள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு அவசர மருத்துவப் பிரிவினர் உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கிய போதிலும், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
வாகனம் வெய்யிலில் நிறுத்தப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட அதி கூடிய வெப்பம் காரணமாகவே சிறுவன் உயிரிழக்க நேரிட்டது என்று உடற்கூற்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் குறித்த அந்த சிறுவனின் தந்தையான 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் மீது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் கவனயீனமாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதனை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் யூன் 27ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.