காலியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது எப்படி? : முழுமையான விபரம் உள்ளே…!

0
567
Galle international stadium match fixing news Tamil

(Galle international stadium match fixing news Tamil)

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அல்-ஜெசீரா செய்திசேவை வெளியிட்டுள்ள ஆவணப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலி சர்வதச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 2016ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி, கடந்த வருடம் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளைத்தை அமைக்கும் பணியிலேயே இந்த ஆட்ட நிர்ணயம் நடைபெற்றுள்ளது.

காலி மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான தரங்க இந்திக மற்றும் ஆடுகள பராமரிப்பாளர்கள் இணைந்து குறித்த ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணிக்கெதிரான போட்டியின் ஆடுகளத்தை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகவும், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் அமைக்குமாறு சூதாட்ட தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் மும்பையில் உள்ள பிரபல சூதாட்ட தரகர் ரொபின் மொரிஸ் மற்றும் இந்திக ஆகியோர் காலியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆடுகளத்தை மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

காலி மைதான ஆடுகளத்தின் பிரதான பொறுப்பாளியாக இருந்த இந்திக, ஆடுகளத்தை மாற்றுவது என்பது இலகுவான விடயம் என்றும், துடுப்பாட்ட வீரருக்கோ அல்லது சுழற்பந்து வீச்சாளருக்காகவோ மாற்றுவது அவ்வளவு பெரிய விடயம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், ஆடுகளத்தை உறுதிப்படுத்தும் ரோலர் (roller) பயன்படுத்தாமல் மிகவும் மோசமாக தயாரித்துள்ளனர்.

எனினும் அடுத்து நடைபெற்ற இந்திய தொடரின் ஆடுகளத்தை கடினமான ஆடுகளமாக மாற்றியுள்ளனர். முற்றிலும் ரோலரின் உதவியுடன் ஆடுகளத்தை கடினமாக மாற்றியது மாத்திரமின்றி, தண்ணீர் அதிகமாக ஊற்றி, ரோலரை வைத்து அழுத்தம் கொடுத்து மைதானத்தை மேலும் கடினமாக மாற்றியுள்ளனர். இதனால் மைதானம் முற்றுமுழுதாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ஓட்டங்களை குவிக்க, ஆட்ட நிர்ணயக்காரர்களுக்கு பெருமளவிலான வருமானம் கிட்டியுள்ளது.

இதேவேளை அடுத்து காலியில் நடைபெறவுள்ள இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நிர்ணயம் செய்யவுள்ளமை குறித்த காணொளியின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சூதாட்ட தரகர் ரொபின் மொரிஸ், இந்திகவிடம் இலங்கை- இங்கிலாந்து போட்டி நான்கு நாட்களுக்குள் நிறைவுபெறும் வகையில் ஆடுகளத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்ள, அதற்கு இந்திக இரண்டரை நாட்களுக்குள் போட்டி நிறைவுபெறும் வகையில் ஆடுகளத்தை அமைப்பதாக கூறியுள்ளார்.

எனினும் குறித்த ஆட்ட நிர்ணயத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் பங்கில்லை எனவும் அல்-ஜெசீரா செய்திசேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பரபரப்பாகிய இந்த சூதாட்ட விவகாரம் தொடர்பில் ஐசிசி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதுமாத்திரமின்றி ஐசிசியின் விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் சபை முழு ஆதரவையும் வழங்குவதாகவும், ஆட்ட நிர்ணயணம் தொடர்பிலான விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஆட்ட நிர்ணயம் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, ஐசிசி வெளியிடும் முடிவுகளின் படி குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை வரவுள்ள இங்கிலாந்து அணி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>

Galle international stadium match fixing news Tamil, Galle international stadium match fixing news Tamil