மலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)

0
875
bad weather continue upcountry

(bad weather continue upcountry Flood, landslide damage others)
மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் பூல்பேங்க் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்சரிவு ஏற்படும் சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு பலத்தளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை லொக்கில் பிரதேசத்திலுள்ள 12 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

நேற்று பெய்த கடும் மழை காரணமாக இந்த பகுதியின் ஊடாக ஓடும் மகாவலி ஆற்றின் கிளை ஆறான கொட்டகலைஓயா பெருக்கெடுத்தமையினாலேயே வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் வெள்ளம் வடிந்துள்ளதால் வீடுகளில் நிறைந்துள்ள நீர் மற்றும் சேற்றை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததனால் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள 46 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதில் அதிகளவில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் நோர்வூட் முஸ்லிம் பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹட்டன் – எபோட்சிலி பிரதான வீதியில் பன்மூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து சுமார் பல மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. எனினும் தற்பொழுது மண்சரிவு அகற்றப்பட்டு பாதை வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று 2.00 மணிமுதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் தங்காலை, ஹென்போல்ட், ஸ்டொனிக், லிந்துலை ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச செயலாளர் சுஜீவா போதிமான்ன தெரிவித்தார்.

இவர்களுக்கான உணவு, உடை, தங்குமிட வசதிகள் யாவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர் மழையினால் நுவரெலியா பிரதேசத்தில் பல விவசாயக் காணிகள் சேதமடைந்துள்ளதோடு, மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; bad weather continue upcountry Flood, landslide damage others