Mushroom Warning Australia
காட்டு காளானை உணவுக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய காளானில் காணப்படும் பங்கஸினால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையை தொடர்ந்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவ் சவுத் வேல்ஸில் , இவ்வருடத்தில் சுமார் 38 பேர், காளான் தொடர்பிலான பிரச்சினைகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளிரான காலநிலை, காளான்கள் நன்கு வளர ஏதுவாக அமைந்துள்ளதாக, நிவ் சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரி மருத்துவர் பெஞ்சமின் ஸ்கேலி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
விஷத்தன்மை கொண்ட காளானையும், உண்ணக்கூடிய காளானையும் பிரித்தறிய பலரால் முடிவதில்லை என சுகாதார அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
விஷத்தன்மையுடைய காளான்கள் கடும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றோற்றம், வியர்வை உட்பட மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியதென எச்சரிக்கப்படுகின்றது.
சில நேரத்தில் சிறுநீரகங்கள் மற்றும் ஈரலையும் பாதிக்கக்குமெனவும் எச்சரிக்கப்படுகின்றது.
காளான்களில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த வகையான ‘டெத் கெப்’ எனப்படும் வகை காளான்கள், விக்டோரியா மற்றும் ஏசிடி ( Australian Capital Territory) பகுதிகளில் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை சமைப்பதால் , அவை உணவுக்கு உகந்ததாக மாறாதெனவும், கடைகளில் வாங்கினால் தவிர காளான்களை உண்ண வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.