சர்வதேசம் தமிழனப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்

0
632
International give justice Tamil massacre

(International give justice Tamil massacre)
சிங்களப் போர்வீரர் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த எந்தவொரு குற்றத்தையும், குற்றமாக கருதுவதற்கு தயாரற்ற நிலையில் உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கரிசனையும் காட்டாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழினப் படுகொலையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உயிர்நீத்த உறவுகளுக்கு பிரதான நினைவுச்சுடர் ஏற்றிய பின்னர் உறவுகளின் மத்தியில் உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் கைதானவர்கள் எந்தவித விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் விலக்கப்படவில்லை.

வன்னி நிலப்பரப்பு தீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலும் தரையும் பாரிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவித்து மீள்குடியேற்றத்திற்கான வழங்கப்பட்ட நிதி, இராணுவத்திற்காக பெருமளவில் ஒதுக்கப்படுகின்றன. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை. மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு படைகள் எடுத்துசெல்ல முடியும்?

எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேறவேண்டிய அவர்கள் மக்களின் காணிகளை அடாத்தாக வைத்திருக்கின்றனர்.

படைகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எமது மக்களுக்காக சர்வதேசத்தால் கொடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது. ஒருவேளை சர்வதேசத்தின் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்க படையினர் மறுத்ததால்தானோ அவை படையினருக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதோ என எண்ணவேண்டியுள்ளது.

இலங்கையில் கடந்த எழுபது ஆண்டுகளாக பார்ப்போமேயானால் சர்வதேச நெருக்குதல் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பது இயலாத காரியம்போல் தென்படுகின்றது.

சர்வதேச அரங்கில் நெருக்குதல்களை இந்த அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன். எமது இனம் தொடர்ந்தும் எடுப்பார் கைப்பிள்ளை போல் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்பட்ட ஓரணியில் திகழ்ந்து இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரவேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; International give justice Tamil massacre