Iran Nuclear Deal
ஈரானுடனான அணுச்சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமான, மோசமான உடன்படிக்கை என்று தெரிவித்த டிரம்ப் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது.
இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ம் திகதி டிரம்ப் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. எனவே, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால் மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும் என ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது