அமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்!

0
886
France continue nuclear contract

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தை தொடரப்போவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. France continue nuclear contract
இதுகுறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃப்ளோரென்ஸ் பார்லி, ஜேர்மனைச் சேர்ந்த ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உலகின் மிகச் சிறந்த ஒப்பந்தம் என்று கூறமுடியாது. அதிலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தின் குறைகளைக் களைந்து அதனை சிறந்ததாக்கும் பணிகளை பிற நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ் மேற்கொள்ளும். அமெரிக்கா அவ் ஒப்பந்தத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த முயற்சிகள் தொடரும்.

இன்றைய நிலையில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தை தடுத்து நிறுத்த அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமே அதிகபட்ச அளவில் உதவும். மேலும், அந்த ஒப்பந்தத்தை ஈரானும் மதித்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகச் செயல்படும் வகையில் ஈரானைத் தூண்டினால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுவதற்கு பதிலாக ஏற்கெனவே இருந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.

ஈரானைப் பொருத்தவரை, அது மேற்காசியப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட நினைக்கிறது. அதனால்தான் சிரியா உள்நாட்டுப் போரில் அது அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டது. மேலும், இருதரப்பினருக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

மேலும், அவர் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படாவிட்டால் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.

எனினும், அந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறி வருகிறது. மேலும், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால், அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்தும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டுவோம் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டாம் என்று அமெரிக்காவுடன் சேர்ந்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகள் டிரம்ப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையிலேயே, பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**