Dough Ford Wins Live Debate
ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நடாத்தப்பட்ட முதல் நேரடி விவாதத்தில் டக் ஃபோர்ட்டே வெற்றி பெற்றுள்ளதாக கருத்துக் கணி்ப்புக்கள் காட்டுகின்றன.
எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவுள்ள ஒன்ராறியோ தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று கட்சிகளின் தலைவர்களும் நேற்று இரவு நடைபெற்ற நேரடி விவாதத்தில் கலந்துகொண்டனர்.
நேற்றைய அந்த விவாதம் முடிவுற்ற பின்னர் அந்த விவாதம் தொடர்பாக கருத்துக் கணிப்புக்கள் நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொரன்ரோ, நோர்த் யோர்க், ஈட்டோபிக்கோ, ஸ்காபரோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, நேற்றைய நேரடி விவாதத்தை பார்வையிட்ட, 2,000 பெரியவர்களிடம் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டே இந்த விவாதத்தில் வெற்றி பெற்றுள்ளதாக 35.1 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை 19.3 சதவீதம் பேரே முதல்வர் கத்தலின் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்.
இது தவிர எவரும் வெற்றி பெறவில்லை என்று 9.5 சதவீதம் பேரும், யார் வெற்றிபெற்றார் என்று சரியாக தெரியவில்லை என்று 11.8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முதல்வர் கத்தலின் வின்னின் விவாதங்களை விடவும், தாம் நினைத்ததை விடவும் புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத்தின் விவாதங்கள் சிறந்ததாக, நேர்மறையானதாக இருந்ததாக விவாத அரங்க அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.