Ontario Election
ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெறவுள்ள ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதனைக் காட்டிலும், எந்த தலைவருக்கு அதிக மக்கள் வரவேற்பினைப் பெறுவார்கள் என்பதே முதன்மையாக உள்ளதனை அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகளில், ஒன்ராறியோவின் சிறந்த முதல்வராக முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட்டே இருப்பார் என்று 25 சதவீதம் பேரும், புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத்தே இருப்பார் என்று 20 சதவீதம் பேரும், லிபரகல் கட்சியின் தலைவர் கத்தலின் வின் என்று 12 சதவீதம் பேரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை டக் ஃபோர்ட்டா ஆன்ரியா ஹோர்வத்தா ஒன்ராறியோவுக்கு தலைமை தாங்குவதற்கான அதிக தகுதிகளைக் கொண்டுள்ளனர் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, ஆன்ரியா ஹோர்வத் அந்த தகுதியைக் கொண்டுள்ளதாக 35 சதவீதம் பேரும், டக் ஃபோர்ட் என்று 30 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ஒன்ராறியோவின் மக்கள் தொகையின் அடிப்படை எதிர்பார்ப்புகளான, நம்பிக்கை, சிறந்த குணாம்சம் மற்றும் போட்டித் தன்மை என்பவற்றில், ஏனைய இரண்டு கட்சித் தலைவர்களைக் காட்டிலும் ஆன்ரியா ஹோர்வத் அதிக அளவிலான நம்பிக்கையை வென்றுள்ளதாக குறித்த இந்த கருத்துக் கணிப்பினை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.