பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது!

0
703
Australia Disallowance Motion

Australia Disallowance Motion

வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஒன்றை, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ளநிலையில், இச்சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் நாடாளுமன்றில் ‘Disallowance Motion’ கொண்டுவரப்படும் என கிரீன்ஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்துள்ளது.

அதேபோல, தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும் என்ற பழைய சட்டம் திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் அரசு கொண்டுவந்துள்ள இம்மாற்றம் பலரையும் மிகமோசமாகப் பாதிக்கும் ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ள கிரீன்ஸ் கட்சி செனட்டர் Nick McKim இச்சட்டமாற்றத்தை ரத்துச் செய்யும்வகையில் அடுத்தவாரம் நாடாளுமன்றில் ‘Disallowance Motion’ கொண்டுவரப்படும் என்றும் ஏனைய கட்சி அங்கத்தவர்கள் பலர் இதற்கு ஆதரவளிப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.