சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கம் என்னவென்று தெரியுமா? : கூறுகிறார் விக்கிரமபாகு

0
860
sinhala rulers purpose vickramabahu karunaratne explained

(sinhala rulers purpose vickramabahu karunaratne explained)
சிங்கள ஆட்சியாளர்கள் எமது செயற்பாடுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?, தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்பது தான் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது என என நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (26) யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை .தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. எனினும், எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தைப் பல்வேறு வழிகளிலும் நாம் நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது

தந்தை செல்வா அரசியல் ரீதியாக இருதடவைகள் தோல்வியைத் தழுவினாலும் அவர் மனம் தளரவில்லை. அவர் தன்னுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இடைநடுவில் கைவிடவில்லை. 1977 ஆம் ஆண்டு நோய் காரணமாகத் தந்தை செல்வா காலமான போதும் இன்றுவரை அவரது புகழ் நிலைத்திருப்பதற்கு அவரது பொறுமையான அணுகுமுறையே காரணம்.

தந்தை செல்வாவின் போராட்டங்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான போராட்டங்கள் எனச் சிலர் கூற முற்பட்டாலும் மகாத்மாகாந்தி எவ்வாறு அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தாரோ அதேவகையான போராட்டங்களையே தன்னுடைய கொள்கைகளுக்காகவும், கோட்பாடுகளுக்காகவும், மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் தந்தை செல்வா முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றோம்.

மகாத்மா காந்தி நடாத்திய போராட்டங்களின் போது இலட்சக்கணக்கான, ஆயிரக்காண மக்கள் அணிதிரண்டு கோரிக்கைகள் முன்வைத்த போது புகையிரதப் பயணங்கள், வீதிப் பயணங்கள் என்பன தடைப்பட்டன. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கையில் கூடப் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக மகாத்மா காந்தி முன்னெடுத்த போராட்டங்களை மக்கள் விரோதப் போராட்டங்களாகக் கருத முடியாது.

தற்போதைய காலப் பகுதியில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கெதிராக விதித்த பல்வேறு சட்டதிட்டங்கள் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி நீண்டகாலமாகப் போராடினார்கள். ஜனநாயக வழியில் மக்களால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டம் வலுவானதாகக் காணப்பட்டமையால் இறுதியில் ரொனால்ட் ட்ரம்ப் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எங்களுடைய சமூகத்தில் வாகனங்களில் பொறிக்கப்படும் ஸ்ரீ எழுத்துக்கள் தொடர்பாக முரண்பாடு எழுந்த போது தந்தை செல்வா அதனை ஜனநாயக வழியில் எதிர்கொண்டார்.

சிங்கள மொழியில் வாகனங்களில் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமானால் தமிழ்மொழியிலும் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமென்பதை எடுத்துக் காட்டுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிப் புறப்பட்டு நிரூபித்துக் காட்டினார்.

சிங்கள ஆட்சியாளர்கள் எமது செயற்பாடுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?, எப்போதும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்பது தான் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இன ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு எட்டப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அரசியல் அதிகாரப் பகிர்வை நிலைநாட்டுவதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:sinhala rulers purpose vickramabahu karunaratne explained, sinhala rulers purpose vickramabahu karunaratne explained