2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா

0
779
2 weeks' time Cauvery management board

(2 weeks’ time Cauvery management board)

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் 2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோதே எச். ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையில் மத்திய அரசு 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது.

இதற்கு காரணம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட அம்சம் தான் ஆகும். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 9 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதில் 5 பேர் மத்திய அரசின் நீர்வளத்துறையை சேர்ந்தவர்கள்.

மேலும் 4 பேர் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியை சேர்ந்தவர்களாவார்கள்.

இதில் கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் அரசும் உறுப்பினர்களை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கும் கர்நாடக தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் திகைத்து வருகிறது. இதனை மக்கள் பார்த்து கொள்வார்கள்.

பாரதிய ஜனதா அரசு ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது.

ஏற்கனவே கோவையில் பாரதிய ஜனதா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அண்மைக் காலமாக சட்டத்தை கையில் எடுத்து கொண்டு வன்முறையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

ஐ.பி.எல். போட்டியின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க. கூறியுள்ளது.

பிரதான எதிர்கட்சியான தி.மு.க. இது போன்று நடத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மோடிக்கு எதிராகவும் பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது எனத் தெரிவித்துள்ளார். (2 weeks’ time Cauvery management board)