(General secretary Vaiko)
‘என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலையெடுக்க விட மாட்டேன்’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி வைகோ சென்னை மேல்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை 1994ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையால் தூத்துக்குடி பகுதியில் காற்று, நீர் மாசு அதிகரித்து வருகிறது. பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி காலாவதியான பிறகும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் 2ஆவது பிரிவு கட்டுமானத்தை தொடங்கியுள்ளது.
இரண்டாவது பிரிவு செயல்படத் தொடங்கினால் தூத்துக்குடி பகுதியில் காற்று மாசுஇ நீர் மாசு அதிகரித்து மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்படும். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வைகோ நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மூத்த சட்டத்தரணி அஜ்மல்கான் வாதிட்டார்.
மேலதிக சட்டத்தரணி ஜெனரல் கே.செல்லபாண்டியன் வாதிடும்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது. 2ஆவது பிரிவுக்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலை செயல்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர், மத்திய, மாநில அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இது குறித்து நீதிமன்ற வளாகத்தில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இந்த ஆலையால் புற்றுநோய்இ சருமநோய் பரவி வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு தமிழக அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளது. என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலையெடுக்க விட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
General secretary Vaiko