மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைக்க முன்மொழிவு

0
122

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் சரணாலயம் ஒன்று அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று (07.02.2024) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருந்தது.

யானைகள் சரணாலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்தி உயிர் சேதங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக யானை வேலிகள் போடப்பட்டாலும் யானைகள் சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டால் யானைகளிடம் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் யானைகள் சரணாலயம் ஒன்றுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குருநாகல், அனுராதபுர மாவட்டத்திற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது, ஆனால் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் அதற்கான வளப் பற்றாக்குறையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைக்க கோரிக்கை | Request To Set Up An Elephant Sanctuary Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 12 வருட அபிவிருத்தி திட்டத்தில் யானைகள் சரணாலயம் அமைப்பதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு யானைகள் சரணாலயம் ஒன்று வருமாக இருந்தால் வளப் பற்றாக் குறைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் செங்கலடி பிரதேசத்தில் 90 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவையும், அம்பாறை மாவட்டத்தின் 130 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டு மேற்படி யானைகள் சரணாலயம் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைக்க கோரிக்கை | Request To Set Up An Elephant Sanctuary Batticaloa

பொலன்னறுவை, அம்பாந்தோட்டை பகுதிகளில் நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் தற்போது நூற்றுக்கணக்கான யானைகள் வருகைதந்துள்ள நிலையில் மட்டக்களப்பை யானைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு மேற்படி யானைகள் சரணாலயம் இன்றியமையாதது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த யானைகள் சரணாலயம் மட்டக்களப்பு, அம்பாறை நிலங்களை இணைத்து உருவாக்கப்பட உள்ள நிலையில் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் குறித்த பிரச்சிகள் மற்றும் மாவட்ட மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு ஆற்றுப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்