மீண்டும் இந்திய அணியின் சுழலில் சிக்கியது அயர்லாந்து!

0
764
Ireland vs India 2nd T20 2018 news Tamil

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொண்டது.

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றும் நோக்கில் இரண்டாவது போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணிசார்பில் கே.எல். ராஹுல் மற்றும் விராட் கோஹ்லி களமிறங்கினர்.

முதல் போட்டியில் டக்கவுட் ஆகி வெளியேறியிருந்த விராட் கோஹ்லி முதல் இம்முறையும் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறினார். பீட்டர் சேஷின் பந்து வீச்சில் விராட் கோஹ்லி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த ராஹுல் மற்றும் ரெய்னா சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

விரைவாக ஓட்டங்களை குவித்த கே.எல்.ராஹுல் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 36 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஓபிரையனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் ரெய்னா 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, இம்முறை நான்காவது துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா டக்கவுட் ஆகி வெளியேறியிருந்தார்.

அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டி 21 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா அதிரடியாக 9 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களை குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 213 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு தடவைகள் 200 ஓட்டங்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்துடன் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் தங்களது 11வது 200 ஓட்டங்களையும் நேற்று கடந்திருந்தது.

அயர்லாந்து அணிசார்பில் பந்து வீசிய ஓபிரைன் 3 விக்கட்டுகளையும், பீட்டர் சேஷ் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பத்திலிருந்து விக்கட்டுகளை பறிகொடுத்து, 70 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகமாக அணித்தலைவர் வில்சன் 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், போர்டர்பீல்ட் 14 ஓட்டங்களையும், தொம்சன் 13 ஓட்டங்களையும் பெற்றுகு்கொடுத்து ஆட்டமிழக்க, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் வீழ்ந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் அறிமுக வீரர் சித்தார்த் கவுல் ஒரு விக்கட்டினை வீழ்த்தியதுடன், ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியின் பந்து வீச்சுக்கு வலுவளித்த உமேஷ் யாதவ் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அத்துடன் இந்திய அணியின் சுழல் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும், குல்டீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக லோகேஷ் ராஹுல், தொடர் ஆட்டநாயகனாக யுஸ்வேந்திர சஹால் நியமிக்கப்பட்டார்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Ireland vs India 2nd T20 2018 news Tamil, Ireland vs India 2nd T20 2018 news Tamil, Ireland vs India 2nd T20 2018 news Tamil