Chief Minister Congress Party people obliged Congress Party
நான் காங்கிரஸ் கட்சியால்தான் முதல்வராகி இருக்கிறேன். மக்களால் அல்ல. அதனால் நான் காங்கிரஸ் கட்சிக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று இந்திய கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜ.க.வும் ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடியூரப்பா முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி பதவியேற்றார்.
முதல்வராக பதவி ஏற்றநிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்து மாநிலத்தின் நலத்திட்டங்கள் குறித்து குமாரசாமி பேசவுள்ளார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்போது அவர் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,
இப்போது கர்நாடகத்தில் அமைந்திருக்கும் அரசு ஒரு கட்சி அரசு அல்ல. எங்கள் கட்சியின் பெரும்பான்மை அரசும் அல்ல. நான் மக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் முழுமையான ஆதரவு தாருங்கள் என்று கேட்டேன். ஆனால், அவர்கள் தரவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் கூட்டணி அமைத்தோம். என்னை முதல்வராக்கியதும் காங்கிரஸ் கட்சிதான். மாநிலத்திலுள்ள 6.50 கோடி மக்களால் அல்ல.
விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்ய நெருக்கடி தரப்படுகிறது. நான் பா.ஜ.க.வைக் காட்டிலும், ஒருபடி மேலே சென்று விவசாயிகளுக்காக உழைப்பேன். விவசாயிகள் வங்கியில் பெற்ற பயிர்கடனை தள்ளுபடி செய்வேன்.
பயிர்கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், பதவியை இராஜினாமா செய்துவிடுவீர்களா என்றும் என்னைக் கேட்கவேண்டியதில்லை. என்னால் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், நான் எனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துவிடுவேன். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்குத்தான் முன்னுரிமை. இன்னும் ஒருவாரம் பொறுத்திருங்கள். அமைச்சரவை அமையட்டும்.
பயிர்கடனை தள்ளுபடி செய்வது குறித்து கூட்டுறவு வங்கிகளிடமும், தேசிய வங்கிகளிடமும் ஆலோசனை நடத்தி வருகிறேன் விவசாயிகள் அவசரப்பட்டு எந்தவிதமான தவறான முடிவும் எடுத்து, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய நிதியுதவிகள், திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்தக்கோரி பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் சந்திக்க இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Chief Minister Congress Party people obliged Congress Party
More Tamil News
- காதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து!
- ஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
- சென்னை மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்!
- பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்.எல்.சி. ஊழியர்கள்!
- ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்!
Tamil News Group websites :