வயநாடு மண்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு

0
120

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகொப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.

அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் இணைந்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வந்தடைந்ததையடுத்து அவரை கேரள ஆளுநரும், முதலமைச்சரும் வரவேற்றனர்.

இதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சூரல்மலா பகுதியில் மேல் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியும் அவர்களுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து இராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறியவுள்ளதுடன் மண்சரிவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பலத்த மழை காரணமாக கடந்த மாதம் 30 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11 ஆவது நாளாக நேற்று மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளதுடன் 273 காயம் அடைந்துள்ளனர். மேலும் 138 பேரை காணவில்லையென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.