“அரசியல்வாதிகள் மக்களின் இதயங்களை வெல்லத் தவறிவிட்டனர்”: வனவாசி ராகுல் தேரர்

0
61

காணி உறுதிகளை வழங்கி, அரிசி விநியோகம் செய்து மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயல் என தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய நாமல் உயன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துரைத்த வனவாசி ராகுல தேரர்; ”இந்த நாட்டின் அரசியலை அவதானிக்கும் போது மிகவும் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதியை வங்கித் திருடன் என பலவாறு விமர்சித்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஒருவரே இந்த நாட்டை வழிநடத்தக்கூடியவர் என கூறுகின்றனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டுக்கு கேடு விளைவிப்பதாக நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமூலத்திற்கும் எதிராக கையை உயர்த்தினார்கள்.

அதிகாரத்தை காப்பாத்துவதற்காகவே அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். உண்மை என்னவெனில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50 வீத அதிகாரத்தை எவராலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், குறித்த 225 பேரில் 150 பேர் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதனால்தான் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களையும் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்குப் பார்க்கிறார்கள்.

கோழிகளை விநியோகித்து நிலப்பத்திரம் வழங்கி, அரிசி விநியோகம் செய்து மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால், அது அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயல்.

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை வெல்வதில் அரசியல்வாதிகள் வெற்றி பெறவில்லை. இந்த நாட்டில் எந்த அரசியல்வாதியாலும் இதை செய்ய முடியவில்லை.

எனவே வாக்களிப்பின் போது மக்களின் தீர்மானத்தை எதிர்பார்க்கமுடியும். ஆகவே இவர்களை எல்லாம் பயனற்ற மனிதர்கள் என்றே கூறவிரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.