தமிழ் பேசும் மக்கள் என தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றிணையும் தருணம் இது: ஆனந்தசங்கரி விடுத்துள்ள அழைப்பு

0
69

தமிழ் பேசும் மக்கள் எனும் பொது அடிப்படையில் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டிய தருணம் இதுவென்றும் இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக உள்ளதாகவும் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“எமது நாட்டில் பல திருப்புமுனையான தேர்தல்கள் அண்மித்துள்ள இந்நேரத்தில் தமிழ் பேசும் மக்கள் எனும் ரீதியில் தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியது எமது கடமையாகும்.

முதலாவது குடியரசு அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு உருவான போது, தமிழர் ஐக்கிய முன்னணி 1974 இல் உதயமாகி பின்னர் 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறி இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளீர்த்து எப்படி செயற்பட்டதோ, அதே விதமாக தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போதும் ஏற்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு, அமரர்கள் தந்தை செல்வா, ஜீ. ஜீ.பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் ஸ்தாபித்த த.வி.கூ. ஆயத்தமாக உள்ளது’ என ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.