இ.தொ.கா குருடர்களா அல்லது செவிடர்களா?: வேலுகுமார் ஆவேசம்

0
46

லயன் அறைகளை கிராமங்களாக மாற்றும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஆதரவளித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்தள்ளியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுவரும் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”200 வருடங்கள் கடந்து மலையக சமூகம் ஏனைய சமூகங்களுகளுக்கு நிகராf சட்டங்களை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் எங்கும் இல்லாதவாறு லயன் அறைகளை குடியிருப்புகளாக கொண்டு அவல வாழ்க்கையை வாழும் ஒரு சமூகம் என்றால் அது மலையக மக்கள்தான்.

அரசாங்கத்தில் இருக்கும் மலையக பிரதிநிதிகளையும் அமைச்சரையும் ஒன்றிணைந்து மலையக மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்நோக்கி தள்ளவும் அவர்களை லயன் அறைகளில் முடக்கவும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை இந்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

பெருந்தோட்டங்களில் புதிய கிராமங்களை உருவாக்குதல் என்ற இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் 1, 2ஆம் பிரிவில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள் மற்றும் வரிசை லயன் அறைகள் ஒன்று சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட்ட எல்லைகள் மற்றும் அம்சங்களுடன் நாட்டில் உள்ள பாரம்பரிய கிராமங்கள் போன்று கிராமங்களாக மாற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, மலையக மக்கள் வாழும் லயன் அறைகளை ஒன்றிணைந்து கிராமங்களாக பெயரிடப்போகிறோம் என மிகத் தெளிவாக குறிப்பிடும் அமைச்சரவை பத்திரத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்திருப்பது வெட்கக்கேடானது.

இந்த தீர்மானத்துக்கு மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்களது பிரதிநிதியாக நாடாளுமன்றம் வந்து அமைச்சரவையில் அமர்ந்துகொண்டு ஆதரவளிப்பது பாரிய துரோகமாகும்.

இ.தொ.காவின் 50ஆண்டு அரசியல் முதிர்ச்சியில் லயன் அறைகளை கிராமங்களாக்க ஆதரவளிக்கிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் குருடர்களாக இருக்க வேண்டும் அல்லது செவிடர்களாக இருக்க வேண்டும் அல்லது அரை லூசு தனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

மலையக மக்களுக்கு நில உரிமைகளை வழங்க பாதீட்டில் 400 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறினார்கள். இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 3, 4 மாதங்கள்தான் உள்ளன. பெருந்தோட்ட பகுதிகளில் எங்காவது ஒரு இடத்தில் நில அளவை செய்து காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என அமைச்சர் இந்த சபையில் வந்து கூற வேண்டும்” என்றார்.