சூடுபிடித்த கொழும்பு அரசியல் களம்: மஹிந்த தரப்பினரை வளைக்க ரணில் முயற்சி

0
62

ஜனாதிபதி தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களை வளைத்துப் போடும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ள போதிலும் அமைச்சர் தனது கருத்தை வெளிப்படையான அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பெரும்பாலான அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முழுமையாக ஜனாதிபதிக்கு பின்னால் உள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றிய போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி ஆக்குவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளித்தது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதை ஆதரிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இது காஞ்சன விஜேசேகர, ஷெஹான் சேமசிங்க மற்றும் கனக ஹேரத் போன்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது.

இவர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. ராஜபக்ச தரப்பினர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதிலும், ஜனாதிபதியின் மீது தொடர்ந்தும், ஏமாற்றத்துடன் உள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான அரசியல் உறவுகள் சீர்குலைத்த போதிலும், அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் எப்போதும் நிலவியது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ராஜபக்சக்களின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ரணில் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்டதில் தனது வாக்குத் தளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாதோ என்ற அச்சமும் பொதுஜன பெரமுனவிற்கு உண்டு.

மக்கள் போராட்டத்தின் பின்னர் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது தனது அடையாளத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அரசியல் அடையாளத்தின் அடிப்படையில் வேறுபட்ட துருவங்கள்.

எனினும், அரசியலில் எதுவும் சாத்தியம் என்ற கூற்றுக்கு அமைய தேர்தலை இலக்காக கொண்டு அவர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவது சாத்தியம் என்கின்றர் அரசியல் ஆய்வாளர்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களை பொறுத்தவரையில், ராஜபக்சக்களின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடமளிப்பது ஒரு தந்திரமான விடயமாகும்.

ராஜபக்சக்களுடன் மேலும் அடையாளப்படுத்தப்பட்டால், சிறுபான்மை வாக்காளர்களை குறிப்பாக முஸ்லிம் வாக்குகளை ஜனாதிபதி இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவாக அனைத்து தேசியவாத சக்திகளையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் மகாஜன எக்சத் பெரமுனவின் (எம்இபி) தலைவரான பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.