கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரகங்கள் மாயம்? நியாயம் கேட்ட எம். பி

0
45

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஹம்தி என்ற மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் இன்று (23) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறைந்தபட்சம் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்ட நிலையில் குழந்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது.

குழந்தைக்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் நளின் விஜேகோன் மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்த வைத்தியர் நுவன் ஹேரத் ஆகியோரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களும் இன்று மருத்துவமனையில் இல்லை. சிறுநீரகம் அகற்றப்பட்டால் அது மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஓராண்டு கடந்தும் இதுவரை அறிக்கை வரவில்லை.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன, இதற்கு என்னிடம் இன்னும் பதில் இல்லை. அறிக்கை பெற்று அடுத்த வாரம் பதில் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.