ராஜபக்சர்கள் எப்பொழுதும் எங்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள்: தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும்- பாட்டலி சம்பிக்க

0
58

இலங்கைத்தீவில் மக்கள் எதிர்நோக்கவுள்ள ஒரு முக்கியமான தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் பல விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும் கூட சட்ட ரீதியாக அது முடியாது என பல சட்டத்தரணிகளும், அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாட்டிற்கு அவசியமானது அரசியலமைப்பு திருத்தம் அல்ல. விரைவில் தேர்தல் ஒன்றை நடத்துவதே என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா நகரில் நடைபெற்ற ‘நாட்டிற்காக இணையும் ஒரு படி’ என்ற நடைமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் சுருக்கம் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் அதனை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக அரசியலமைப்பின் முரண்பட்ட சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் ஒரு பகுதியை மாற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான அமைப்பு உள்ளது. அதற்கு நேரம் எடுக்கும். மேலும் தேவைப்பட்டால், அது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம். ஆனால் இப்போது நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு நாடு தயாராக வேண்டும்.

அதனால் புதிய சட்டத்தின் மூலம் இந்தத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கவோ அல்லது ஓராண்டுக்கு ஒத்திவைக்கவோ வாய்ப்பு இல்லை.

செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்குள் இலங்கை வாழ் மக்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும். .” எனத் தெரிவித்தார்.

மேலும், ராஜபக்சக்களால் ஆதரிக்கப்படும் எந்தவொரு வேட்பாளரும் எங்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள். இந்த நாட்டை வங்குரோத்து ஆக்குவதற்கு இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு ராஜபக்சக்களே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.