க்ளப் வசந்த கொலை – மிகைப்படுத்தப்படும் சிசிரிவி காட்சிகள்: இரகசிய வாக்குமூலம் வழங்க நீதிபதியிடம் சந்தேகநபா் கோரிக்கை

0
64

க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் விசாரணைகளுக்கு அவசியமான பல காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானிகள் அதிக அவதானம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறான காணொளிகளை வெளியிடுவது திட்டமிடப்பட்டு இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் கொழும்பில் சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகளும் நாடகமொன்று போல் காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கு, க்ளப் வசந்தவை காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் டெட்டூ நிலைய உரிமையாளரை பொலிஸார் விசாரிக்கும் ஒரு காணொளி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளமை பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மேலும், இது குற்றவியல் விசாரணைகளில் எப்பொழுதும் செய்யாத ஒரு விடயம் என பொலிஸ் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, பொலிஸ் விசாரணைகளுக்கு அத்தியாவசியம் எனக் கருதப்படும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தின் உள்ளக சிசிரிவி காட்சிகளை வெளியிட்டவர் யார் என்பது தொடர்பிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இலங்கைத்தீவைப் பொறுத்தவரை பாதாள உலகக் குழுக்களின் பின்னால் தெற்கின் அரசியல்வாதிகளுக்குத் தொடர்புள்ளதாக ஏற்கனவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

உயிரிழந்த க்ளப் வசந்த பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருபவர் என்றும் அறியப்படுகின்றது. இது தொடர்பில் இன்று நாடாளுமன்ற அமர்விலும் பல விவாதங்கள் எழுந்தன.

இப் பின்னணியில், துப்பாக்கிதாரிகள் வருகைத் தந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனங்களின் சிசிரிவி காட்சிகளை வெளியிடுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவது அவசியம் எனவும் அவதானிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், டெட்டூ நிலைய உரிமையாளர் உள்ளிட்ட மேலும் ஏழு பேரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் சந்தேககிக்கப்படும் டெட்டூ நிலைய உரிமையாளர், கடுவெல நீதிமன்ற நீதிபதியிடம் இரகசிய வாக்குமூலம் வழங்க நேற்று புதன்கிழமை அனுமதி கோரியுள்ளார்.

எனினும், மீண்டும் ஒருமுறை சிந்தித்து கோரிக்கை விடுக்குமாறு நீதிபதி அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.