கடையில் கையடக்க தொலைபேசியை திருடிய பெண்: ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை

0
68

தம்புள்ளையில் உள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் தொலைபேசியை திருடியதாக கூறப்படும் பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் தம்புள்ளை நீதவான் உத்தரவிட்டார். சமீபத்தில் தம்புள்ளை நகரில் உள்ளகையடக்கத் தொலைபேசி கடையில் ஒரு தாயும் மகளும் தொலைபேசிகளைத் திருடும் காணொளி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது.

கையடக்க தொலைபேசி கடையின் உரிமையாளர் தம்புள்ளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் திருட்டைச் செய்ததாகக் கூறப்படும் தாயும் மகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கையடக்கத் தொலைபேசியுடன் திருடிய மகளையும் தம்புள்ளை பொலிஸார் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தாய்க்கு எதிராக முறைப்பாட்டாளர் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் தாயை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை என தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை நகரின் மத்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றிற்கு தாய், மகள் மற்றும் சிறுவன் ஒருவனுடன் வந்த போது ​​அங்கு வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியை மகள் திருடியிருந்தார்.

இதன்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் இந்தச் சம்பவம் பதிவாகியிருந்தது. பின்னர் கடையின் உரிமையாளர்கள் தம்புள்ளை நகரில் வைத்து குறித்த தாய் மற்றும் மகளை கண்டுப்பிடித்து அவர்கள் இருவரையும் தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதுகாப்பு கமரா அமைப்பில் பதிவான காட்சிகளையும், வழியில் கடைக்காரர்களிடம் தாயும் மகளும் தொலைபேசியை எப்படிக் கொடுத்தார்கள் என்பதையும் கடைக்காரர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலே சந்தேகநபரை பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.