சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம்: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு; A9 வீதி முடக்கம்

0
52

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸார் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தீவிரமடையும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் கவனயீர்ப்பு போராட்டமும், கடை அடைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன் அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று இரவு அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக அவரை கைது செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சமூக ஊடங்களிலும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் கவனயீர்ப்பு போராட்டமும், கடை அடைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.