யாழ் வலயக் கல்வி பணிப்பாளரின் அலுவலக அறையிலிருந்து சுவாமிப் படங்கள் அகற்றம்!

0
70

யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளரின் அலுவலகத்தில் நிரந்தரமாகத் வைக்கப்பட்டு, பூசித்து வரப்பட்ட சைவ சமய தெய்வப் படங்கள் புதிதாகப் பதில் பணிப்பாளர் கடமையக் கவனிக்க வந்த கிறிஸ்தவ அதிகாரியினால் அங்கிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மத சார்பான அதிருப்தி நிலையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணம் கல்வி வலய அலுவலகத்தில் ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக பூசித்து வரப்பட்ட சுவாமிப் படங்களே இவ்வாறு நேற்றைய தினம் ஒரே நாளில் தற்போதைய பதில் பணிப்பாளர் கே.ஜே. பிறட்லியினால் அகற்றப்பட்டன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இதுவரைக் கடமையாற்றிய ரவிச்சந்திரன் கடந்த 19 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றார். அதனால் ஏற்பட்ட யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் வெற்றிடத்திற்கு தற்போதைய வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரான பிறட்லி பதில் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பதில் கடமையாற்றும் காலத்திலேயே சைவ அடையாளங்களை அவர் அகற்றினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் வலயப் பதில் கல்விப் பணிப்பாளரான கே.ஜே.பிறட்லியிடம் வினவியபோது எந்தவொரு மத அடையாளத்தையும் அகற்றுவது என் எண்ணமல்ல.

இருந்தபோதும் ஒரு மத அடையளம் மட்டும் இருப்பதனை ஏற்க முடியாது என்ற கருத்திலேயே நான் செயற்பட்டேன். இருந்தபோதும் பழைய நிலைமை அப்படியே பேணப்பட வேண்டும் என மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால் ஓர் அறவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படும் என அவர்  கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இந்த விடயம் தொடர்பாக இன்று (நேற்று) மாலை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனையில் இதுவரை நாளும் எத்தனை சுவாமிப் படங்கள் எந்த அளவில் இருந்தனவோ அவை உடனடியாக அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிறட்லிக்கு கண்டிப்பான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.